கவர்தல்

கவர்தல் என்பதை, தெரிந்த நன்றாக புரிந்த ஒன்றை மனதில் பதித்து, தக்க சமயத்தில் தமக்குரிய நடையில் வெளிப்படுத்துதல் என்றும் கூறலாம். தெரிந்தும் தெரியாமலும் என இருவகையாக கவர்தல் நிகழும். மிகவும் பிடித்த பிரபலங்களின்/அன்பர்களின் நடை உடை பாவனைகள் பலரை எளிதில் கவரும். ஏதாவது ஒரு நிகழ்ச்சிகளில்லதை அனைவரின் முன்பாக அதை வெளிப்படுத்துவார்கள். இது ஒருவகையில் ஜெராக்ஸிங் மாதிரியான நிகழ்வாக இருக்கும். இது முதல்வகை. மற்றொரு வகை ஆழ்மனதில் பதிந்து இருக்கும் பிடித்தவர்களின் வார்த்தைகள் மற்றும் அவர்களின் சில வழக்கங்கள் தானாக தன்னுடைய கற்பனையுடன் சேர்ந்து நிகழ்வாகவோ அல்லது வார்த்தைகளிலோ வெளிப்படும். இவ்வகையான கவர்தல் பொதுவாக எழுத்துத்துறையில் அதிகமாக காணப்படும். இது இரண்டாவது வகை.
அனைவரும் என்றாவது ஒருநாள் கவர்தலை வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்பது அனைவருக்கும் உண்டான பொதுவான தலைவிதி போலும். இத்தளத்தில் உள்ள சில கவிதைகளில் கவிஞர் கண்ணதாசன் கவிதை வரிகளின் தாக்கத்தையும், கவிஞர் வாலி அவர்களின் கவிநடையையும் காண முடியும். இரண்டாவது வகையாக இருக்கக்கூடும்.
திரு. சுகி. சிவம் அவர்கள், இதைப்பற்றி பொய் முகங்கள் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். அவர் கவர்தல் என்ற முறையில் அணுகாமல், ஒவ்வொருவருக்கும் பல முகங்கள் உண்டு, அது பல்முகமல்ல, பலரது முகங்கள் என்று தத்துவங்களின் வழியில் கவர்தலைப் பற்றி எழுதியிருக்கிறார். அனைவரும் சமூகத்தால் உருவான சமூக மனிதர்களே…என்ற கருத்தோடு கவர்தலுக்கான அடிப்படையை விளக்கியிருக்கிறார்.
உளவியலைப் பொறுத்தவரை இது மெமெடிக்ஸ் என்ற பிரிவில் விளக்கப்பட்டு இருக்கிறது. மெமெடிக்ஸின் அடிப்படைக்கூறு மீம் என்று அழைக்கப்படுகிறது. மீம் என்பதை மிஸ்டர். ரிச்சர்ட் ப்ராடி “ஒரு எண்ணம், நம்பிக்கை அல்லது மனப்போக்கு – ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவது” என்று கூறுகிறார். மீம் என்ற வார்த்தையை உருவாக்கிய மிஸ்டர். ரிச்சர்ட் டாக்கின்ஸ் அதை “பிறர் நடவடிக்கையை பிரதிபலித்தல்” என்று கூறுகிறார். தினந்தோறும் பலநூறு மீம்கள் நம்மிடம் பரவிக் கொண்டிருக்கிறது. மீம்களை கவரும் போது, நல்லவையா அல்லது கெட்டவையா என மனதால் பாகுபடுத்த முடியாது. என்னை ஆட்கொண்ட மீம் என்னவென்று யோசித்து பார்த்தேன். தும்மல் வந்நவுடன் என்னுடைய தாயார் “அம்மா” கூறுவார். அதனால் நானும் பதினைந்து வருடங்களுக்கு மேலாக அதை பிரதிபலித்திருந்தேன். ஆனால் அது,வேலைக்காக பெங்களூர் சென்றபின் சில வருடங்களில் “முருகா” என மாற்றம் அடைந்தது. உபயம் என்னுடைய சீனியர். நல்ல பக்திமான். என் மனைவியோ “பாபா” என்று பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார். இதுவரை நாங்கள் இருவரும் மாற்றவில்லை. ஆக, விருப்பங்களே பிரதிபலித்தலை தேர்வு செய்வதாக நினைக்கிறேன்.
சிலர் தன்னுடைய நகல்களை அவ்வளவாக ரசிப்பதில்லை. சிலருக்கோ நகலாக ஏதேனும் வாராதா.. என்ற ஏக்கத்தில் காலத்தைக் கடத்திக் கொண்டிருப்பார்கள். சிலர் கவர்தலை தவிர்க்க விரும்புவார்கள். பலரோ கவர்தலை தங்களின் மூலதனமாக வைத்திருப்பார்கள். இவ்வகையான முரண், இந்த சமூகத்தை கூர்ந்து நோக்கினால் புலப்படும்.
பற்றாமல் விளக்கு எரியாது என்பதைப் போல, கவராமல் மனிதனால் பிரகாசிக்க முடியாது என்பதை காலம் காட்டிக் கொண்டு கடந்து கொண்டிருக்கிறது. ஆனால் எவ்வகை என்பதை, அவரவர் விருப்பங்களே தேர்வு செய்கின்றன.
உதவிய புத்தகங்கள்:-
1. மனசே நீ ஒரு மந்திரச் சாவி – திரு. சுகி. சிவம்
2. மழுப்பல்களை நிறுத்துங்கள் (Stop the Excuses By – Dr. Wayene W. Dyer)

Comments

Popular posts from this blog

மனதைக் கவர்ந்த பாடல்

வாழ்க்கை

விரல்கள்